
சர்வதேச பிரபலங்கள் சச்சின் தெண்டுல்கர், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் ஆகியோரையே டோனி பின்னுக்குத் தள்ளிவிட்டார் என்பது ஆச்சரியச் செய்தி.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 24 நிறுவனங்களுக்கு தொலைக்காட்சி விளம்பரத்தில் `பளீரிட்டிருக்கிறார்’ டோனி. அதேநேரம் ஷாருக்கான் 16 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும், சச்சின் 15 பிராண்ட்களுக்கான விளம்பரங்களிலும் தோன்றியிருக்கின்றனர். ஊடக ஆய்வு ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சச்சின், ஷாருக்கானை மட்டுமல்ல, மேலும் பல பாலிவுட் அழகுத் தாரகைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டார் டோனி. பிரபலங்கள் தோன்றும் விளம்பரங்களில் இந்த முன்னணி நடிகைகள் மட்டும் 45 சதவீதப் பங்கை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் டி.வி. பிரியராக இருந்தால், கரீனா கபூர், சோனம் கபூர், கஜோல், ஐஸ்வர்யா ராய் ஆகியோரே சின்ன திரையில் அடிக்கடி புன்னகைக்கும் அழகு நட்சத்திரங்கள் என்று அறிந்திருப்பீர்கள்.
முன்பு குறிப்பிட்ட ஆய்வின்படி, பிரபலங்கள் தோன்றும் டி.வி. விளம்பரங்களில் இந்தி நடிகர், நடிகையர் 42 சதவீதத்தையும், விளையாட்டு நட்சத்திரங்கள் 10 சதவீப் பங்கையும் வகிக்கின்றனர்.
தனது நீண்ட விளம்பரப் பட்டியலை இரண்டாண்டு காலத்துக்கு நிர்வகிப்பதற்கு `ரிதி ஸ்போர்ட்ஸ் மானேஜ்மென்ட் அண்ட் மைண்ட்ஸ்கேப்ஸ்’ என்ற நிறுவனத்துடன் கடந்த ஜூலையில் 210 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டோனி.
இந்திய விளையாட்டுலக வரலாற்றிலேயே இது ஒரு புதிய சாதனை. 2006-ம் ஆண்டில் `ஐகானிக்ஸ்’ என்ற நிறுவனத்துடன் சச்சின் தெண்டுல்கர் மூன்றாண்டு காலத்துக்கு ரூ. 180 கோடிக்கு ஒப்பந்தம் போட்டதே இதற்கு முன் அதிகபட்சமாக இருந்தது.
டோனி, கிரிக்கெட் களத்தில் நாயகனாகத் திகழும் வரை, அவரை விளம்பர உலகிலும் யாரும் அசைக்க முடியாது என்பது உறுதி!
No comments:
Post a Comment